பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா.. வெளியான முக்கிய தகவல்
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கல்வியாளர், சமூக ஆர்வலர் என அறியப்பட்ட பன்வாரிலால் புரோகித், ஆளுநராக அசாம் மற்றும் தமிழ்நாட்டை தொடர்ந்து பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூடியின் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார்.
இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும், அம்மாநில அரசுடனும் கடுமையான மோதல் போக்க்கு நிலவியது. தற்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
பன்வாரிலால் புரோகித் அரசியல் வாழ்க்கையில், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், ‘தி ஹிட்டாவாடா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், மேலும், மத்திய இந்தியாவின் அரசியல் மற்றும் ஊடகத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.