புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

 
Chandra Priyanka

புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பாக நெடுங்காடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திர பிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரியின் 2வது பெண் அமைச்சர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 

சந்திர பிரியங்காவின் தந்தை சந்திரகாசு நெடுங்காடு தொகுதியின் எம்.எல்.ஏவாக 6 முறை இருந்துள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்த அவரின் மறைவுக்கு பிறகு 2016ல் முதல் முறையாக சந்திர பிரியங்கா நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

இந்நிலையில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்புடன் சேர்த்து ஆதி திராவிட நலத்துறை, வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளையும் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார். 

Chandira Priyanga

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சூழ்ச்சி அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க முடியாது என தெரிவித்துள்ளதுடன் தனது தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன் உதாரனங்கள் வரலாற்றி உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வருகிறேன்..

மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது, தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.

சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா..

Chandira Priyanga

என் துறையில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக வெளியிடுவேன் என உறுதியளிக்கிறேன்.

என்னை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ஆனல் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எம்.எல்.ஏவாக எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்.

எனக்கு பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி. மேலும் எனது ராஜினாமாவால் காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவுக்கு வழங்கி நியாயம் செய்ய வேண்டும் என கோருகிறேன்.

இறுதியாக பெண்களுக்கு முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கிடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நன்றி” என்று சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

From around the web