வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வருகிற 23-ந்தேதி வேட்புமனு தாக்கல்

 
Priyanka-Gandhi Priyanka-Gandhi

வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வரும் 23-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்பி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் ரேபரேலி தொகுதி எம்பியாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15-ம் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர்.

Priyanka-Gandhi

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் வருகிற 22-ம் தேதி கேரளா வருகிறார். மறுநாள் (அக். 23) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Election

வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார். தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.

From around the web