நாளை பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா.. டெல்லியில் 144 தடை உத்தரவு

 
144

டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், பாஜக உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாஜக 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

Modi

அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.

உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது. நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து, குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரும் அழைப்பு விடுத்த நிலையில், நாளை பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.

Modi

இந்த நிலையில், மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பித்து  டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் டெல்லியில்  டிரோன்கள் மற்றும் பாரா கிளைடிங் போன்றவை பறக்கத் தடை என  டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

From around the web