மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பாக கன்னியாகுமரியில் தியானம்!

 
Modi

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் 13-ம் தேதியும், 5-ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20-ம் தேதியும், 6-ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

7-ம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வரும் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

PM-modi-innagurates-university-stone-laydown

இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி பல முறை தமிழ்நாடு வந்து சென்றார். பிரதமர் மோடி, முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் நடைபெற்ற நிலையில் கோவை, சென்னையில் பேரணி மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30, 31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 29-ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் மே 30-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Modi

வருகிற 30-ம் தேதி அன்று டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று மாலை படகு மூலம் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1-ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web