அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டி உயர்வு.. ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி அதிகரிப்பு! பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! 

 
Savings

பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

Post Office

பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது. கடந்த முறை, இதற்கு வட்டி உயர்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும்.

ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 

Savings

மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆகிறது. அதே சமயத்தில், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), சேமிப்பு டெபாசிட் (4 சதவீதம்) ஆகியவற்றுக்கு பழைய வட்டி விகிதமே நீடிக்கும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

From around the web