பிரதமர் மோடியை சந்தித்த பொன்னார்! அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா?

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இரண்டாவது தடவை தொடர்வாரா அண்ணாமலை அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது தான் தமிழ்நாட்டு அரசியலின் முக்கியமான கேள்வியாக உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துப் பேசிய பிறகு, அண்ணாமலை பாஜகவின் தலைவராக நீடிப்பார் என்ற பேச்சு வலுத்தது. தமிழிசை, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள் என்றும் தகவல் வெளியானது.
சென்னையில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இல்லத் திருமண விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது, அவருடைய காரில் முன் இருக்கையில் அண்ணாமலை இருந்த புகைப்படம் வீடியோவும் வெளியானது. இந்த நிகழ்வு அண்ணாமலையே மீண்டும் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நீடிப்பார் என்ற தகவலை உறுதி செய்வதாகவும் இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியுடன் பொன் ராதாகிருஷ்ணனின் திடீர் சந்திப்பு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.