பச்சிளம் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல்.. குணமாக சூடு வைத்த கொடூரம்!

 
Baby

மத்திய பிரதேசத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹார்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தையின் குடும்பத்தினர், கடந்த 4-ம் தேதி நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்க உள்ளூர் செவிலியரான டாய் அணுகியதாகவும், அவர் அந்த குழந்தையில் உடலில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார். இருப்பினும் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் கழுத்து, வயிறு மற்றும் உடல் உறுப்புகளில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைக்கப்பட்ட தழும்புகள் காணப்பட்டதாக தெரிவித்தனர். அந்த குழந்தை இப்போது ஷாதோலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Hot rod

இது தொடர்பாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ஆர். எஸ். பாண்டே கூறுகையில், அந்த குழந்தையில் பாட்டி இதேபோல் காய்ச்சலுக்காக உள்ளூர் செவிலியரை அணுகியதாகவும் அவருக்கும் இதேபோல் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டதாகவும் இதனால் அந்த பழைய முறையை தனது பேரக் குழந்தைக்கும் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த சுகாதார அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

doctor

மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவர் டாக்டர் நிஷாந்த் பிரபாகர் கூறுகையில், குழந்தை பிறந்த உடன் அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டுள்ளது. பின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும் சூடு வைக்கபட்டுள்ளது என கூறியுள்ளார். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில் இது போன்ற மூட நம்பிக்கை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web