அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ஐ சந்திக்கப் புறப்பட்டார் பிரதமர் மோடி!!

பாரிஸ் நகரில் இரண்டு நாள் ஏ.ஐ தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழியனுப்பி வைத்தார்.
ஏ.ஐ. தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பிரதமர் மோடியை பாராட்டிப் பேசினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி தனக்கு ஆதரவாக பிரச்சார நிகழ்வில் பங்கேற்க வில்லை என்ற அதிருப்தி அதிபர் ட்ரம்ப் க்கு இருப்பதால், பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு திருப்பி அனுப்பியதும் இந்தியாவை அமெரிக்கா அவமதிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டிப் பேசியுள்ளது ட்ரம்ப் - மோடி இடையே சமரச முயற்சியாகக் கருதப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப்-ம் பழையதை மறந்து மீண்டு பிரதமர் மோடியுடன் நட்புக்கரம் நீட்டுவார். இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது.