அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. பரபரக்கும் அரசியல் களம்!
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், டிசம்பரில் ராமேசுவரத்துக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது, பாம்பன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியை மோடி திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஒன்றிய அரசுத் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” நடைபயணம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைய உள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது உறுதியாகியுள்ளது.