சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ப்ளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி தாளாளருக்கு போலீஸ் வலைவீச்சு!

 
Puducherry Puducherry

புதுச்சேரியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவிக்கு பள்ளி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (45). இவர் அப்பகுதியில் ஜெய பாலகோகுலம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் தொண்டமாநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

POCSO

இந்தப் பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ப்ளஸ்-2 மாணவி ஒருவருக்கு, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாலியல் ரீதியாக பள்ளி நிர்வாகி குமரன் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி இரவு சிறப்பு வகுப்பின் போது பள்ளி நிறுவனர் குமரன், அம்மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Villianur PS

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலய்யன் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பள்ளி நிறுவனர் குமரனை தேடி வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறத்தில் பள்ளி நிறுவனரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web