காட்டுக்குள் வர வைத்து பிளஸ்-2 மாணவி எரித்துக் கொலை.. ஆந்திராவில் பயங்கரம்

 
Andhra

ஆந்திராவில் பிளஸ்-2 மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவியும், விக்னேஷ் என்ற நபரும் நீண்ட நாட்களாக  காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் விக்னேஷ் சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தனது பழைய காதலையும் தொடர வேண்டும் என்று விரும்பிய அவர், மாணவியை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி விக்னேஷ் அவரை அழைத்துள்ளார். 

fire

இதற்கு அந்த மாணவி மறுக்கவே, ‘நீ வராவிட்டால் செத்துப்போவேன்’ என்று கூறி மாணவியை விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவி, விக்னேஷ் கூறிய இடத்திற்கு தனியாக சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விக்னேஷ், சிகரெட் லைட்டரால் மாணவியின் உடையில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மாணவியின் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அதற்குள் விக்னேஷ் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Police

தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, தீ விபத்தால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web