தேவாலய பிரார்த்தனையின் போது ப்ளஸ்-1 மாணவன் சுருண்டு விழுந்து மரணம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
கேரளாவில் உள்ள தேவாலயத்தில் ப்ளஸ் 1 மாணவன் மயங்கி, சரிந்து விழுந்து வாயில் நுரை தள்ளியபடியே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அனக்கல் பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி, வழக்கமான ஆராதனைக்காக அந்த திருச்சபையின் பக்தர்கள் தேவாலயத்தில் திரண்டிருந்தனர். நேற்று காலை 7 மணியளவில் ஆராதனைத் துவங்கி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென பால் ஜோசப் என்பவரின் மகன் மிலன் பால் (16) எனும் மாணவன், மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்தார். அந்த திருச்சபையின் பலிபீடப் சிறுவனாகவும் மிலன் பால் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென அருகில் இருந்த மாணவன் மயங்கி விழுந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உதவி செய்ய முயன்றனர்.
உடனடியாக வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த மிலனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மிலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மாணவன் மிலனின் இறப்புக்கான காரணம் என்னவென இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
மிலன் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் அந்தோனி பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மிலனை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மாணவன் மிலன் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.