நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. இன்று முதல் அமல்!

 
Petrol

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

Petrol

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த விலை குறைப்பு இன்று (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அமைச்சர் மேலும் கூறியிருந்தார். இதன் மூலம் சுமார் 2 ஆண்டு களுக்குப்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

Modi

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக இருந்தது. இது இன்று முதல் ரூ.94.72 ஆக விற்பனையாகிறது. இதைப்போல டீசல் விலையும் ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக குறைந்துள்ளது. அதே போல் சென்னையில் நேற்று ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.100.73 ஆக குறைந்துள்ளது. இதைப்போல டீசல் விலையும் ரூ.94.33-ல் இருந்து ரூ.92.33 ஆக குறைந்திருக்கிறது.

From around the web