பானிபூரி கடைக்காரர் அடித்துக் கொலை.. இலவசமாக தர மறுத்ததால் கும்பல் வெறிச்செயல்!

 
Panipuri

உத்தர பிரதேசத்தில் இலவச பானிபூரி வழங்க மறுத்த கடைக்காரரை ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் சந்திரா (40). இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாகேரியில் வசித்து வந்தார். பானிபூரி விற்பனை செய்யும் தொழிலில் பிரேம் சந்திரா ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையில் இருந்த போது ஒரு கும்பல் பானிபூரி சாப்பிட வந்துள்ளது. அப்போது இலவசமாக அவர்கள் பானிபூரி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேம் சந்திரா, இலவச பானிபூரி வழங்க முடியாது என்று மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பிரேம் சந்திராவை அடித்து உதைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பிரேம் சந்திரா மயங்கி விழுந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் கும்பலிடம் இருந்து அவரை மீட்டனர். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

dead-body

இந்த நிலையில் பிரேம் சந்திரா உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் நேற்று உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று பிரேம் சந்திரா உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “பிரேம் சந்திராவிடம் உள்ளூரைச் சேர்ந்த தீரஜ் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகள் இலவசமாக பானிபூரி கேட்டுள்ளார். தர மறுத்ததால் அவர்கள் பிரேம் சந்திராவை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். இந்த வழக்கில் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Police

சக்கேரி காவல் நிலைய ஆய்வாளர் அசோக் குமார் துபே கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேம் உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

From around the web