ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு.. ராகுல் காந்தி அறிவிப்பு!!

 
Rahul Rahul

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஏப்.24) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, மாநிலங்களவை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கும் முன்பு, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் செலுத்தப்பட்டது.

காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை களையும், இனிமேல் எடுக்க போகும் நடவடிக்கைகளையும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் எடுத்துரைத்தனர்

நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தே.ஜ கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பஹல்காமில் நடை பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும். நான் காஷ்மீர் சென்று அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.

From around the web