தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! ஒன்று திரளும் 8 மாநிலங்கள்!!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர் சார்பில் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் ஆகிய 3 முதலமைச்சர்களும் மற்றும் கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் பங்கேற்க உள்ளனர் என்று திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒடிசா மாநிலத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அல்லது அவரது பிரதிநிதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டி அல்லது அவரது பிரதிநிதி மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதியும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.