ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்ற அத்தை.. கேரளாவில் அதிர்ச்சி!

 
Kerala

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையை சொந்த அத்தையே, கிணற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொன்னியூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகண்டன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிகளுக்கு அனந்து என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். இவர்களுடன் ஸ்ரீகண்டனின் சகோதரி பிந்து வசித்து வந்துள்ளார். பிந்துவிற்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அனந்துவின் தாய் சிந்து, வீட்டின் அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார்.

குழந்தையுடன் இருந்த பிந்து திடீரென மாயமானார். சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய போது பிந்துவும் குழந்தையும் மாயமானது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த சிந்து மற்றும் உறவினர்கள் இருவரையும் தேடி உள்ளனர். அப்போது அதே பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்கள் சிலர் பிந்து அப்பகுதியில் சுற்றித்திரிவதை கண்டு அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.

baby

அப்போது சிறுவனை அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டதாக அவர் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக ஸ்ரீகண்டன் - சிந்து தம்பதிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அனைவரும் பல்வேறு கிணறுகளுக்கும் சென்று பார்த்த நிலையில் அங்கன்வாடி அருகேயுள்ள கிணறு ஒன்றில் குழந்தை ஒன்றின் உடல் மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது, குழந்தை அனந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

vanitha ps

இதைத் தொடர்ந்து பிந்துவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருவதால் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web