புதுச்சேரில் கொரோனாவுக்கு ஒருவர் பலி.. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு காரைக்காலில் நிகழ்ந்த சோகம்!!

 
corona

காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,824 பதிவான நிலையில், இன்று 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Corona-virus

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 30 பேர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த 35 வயதுமிக்க பெண் ஒருவருக்கு மூளை கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மருக்கு கடந்த ஒன்றாம் தேதி கொண்டு வரப்பட்டார். 

எந்த நோயாளி அனுமதிக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுக்கும் நடைமுறைப்படி அவருக்கு பரிசோதனை எடுத்ததில் 2ம் தேதி நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் காரைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா விதிமுறைகளின் படி இன்றே அடக்கம் செய்யப்பட்டது.

Corona

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளேன், அந்த அறிக்கையின் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

From around the web