சிரிஞ்சில் மருந்து நிரப்பாமல் 75 நாள் குழந்தைக்கு ஊசி போட்ட நர்சு.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Kerala

கேரளாவில் பிறந்து 75 நாள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய போது சிரஞ்சில் மருந்தில்லாமல் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விஷ்ணு பிரசாத் என்பவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார். 

தாய் - மகள் இருவரையும் தடுப்பூசி போடும் அறைக்கு செவிலியர்கள் அழைத்துச் சென்றனர். பின்பு செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டிருக்கிறார். அப்போது குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து இல்லாததை குழந்தையின் தாய் பார்த்து, அதுபற்றி ஷீபாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்குள் குழந்தைக்கு நர்சு ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. 

Syringe

இதையடுத்து செவிலியர் ஷீபா, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்துவெளியே சென்றுவிட்டார். காலி சிரிஞ்சை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது. இந்த விவகாரம் மருத்துவமனை முழுவதும் பரவியது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு செவிலியர் மீண்டும் வருவார் என்று ஸ்ரீலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவரோ குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிரிஞ்சில் மருந்து இல்லாமல், காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணியில் இருந்த செவிலியர்களான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததும், அப்போது நர்சு ஷீபா கவனக்குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்து எடுக்காமல் உடலில் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. 

suspend

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் செவிலியர்கள் ஷீபா, லுர்த் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் பணியின் போது சண்டையிட்டது மட்டுமின்றி, கவனக்குறைவாக பணிபுரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்திருப்பதாகவும், அதனால் குழந்தைக்கு உடல்நல பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும் குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

From around the web