2000 ரூபாய் பண மாற்றத்திற்கு எந்த ஆவணமும் தேவையில்லை ! ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!!
அறிமுகம் செய்யப்பட்ட 7 ஆண்டுகளுக்குள் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.2000 ரூபாய் தாள்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் தாள்களைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு விதமான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது. அரசின் பணமதிப்பிழப்பு திட்டத்தின் தோல்வியே இந்த அறிவிப்பு என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பெருமளவில் பதுக்கியுள்ளதாக நம்பப்படுகிற 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டு வரச்செய்யும் வகையில்தான் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.