கேரளாவில் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் தளர்வு.. மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்!

 
Nipah

கேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு 2 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் மேலும் 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டன. தொற்று பாதித்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

Nipah

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் யாருக்கும் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை என கேரள சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடைகள் இரவு 8 மணி வரையும், வங்கிகள் மதியம் 2 மணி வரையும் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் கட்டுபாடுகள் உள்ள ஊராட்சி பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Veena-George

முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி மக்கள் தஙகள் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. நிபா வைரஸ் தொடர்பாக தற்போது பாதிப்புகள் இல்லாததால் மாநிலம் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது, “நிபா வைரஸ் தொடர்பாக 61 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவுகள் வெளியானதில் 61 நபருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளானவர்களை பராமரித்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்து உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் கண்காணிப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எதிர்மறையாகும் என நம்புகிறோம். நிபா பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேற்று (செப். 18) ஆய்வு நடத்தினர்” என்று தெரிவித்தார். 

From around the web