அடுத்த வாரம் புதுமனை புகுவிழா.. திடீரென அடியோடு இடிந்த 3 மாடி வீடு.. புதுச்சேரியில் பரபரப்பு!

 
Puducherry

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டிடம் நொடியில் சரிந்து விழுந்த தரைமட்டமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவரை இழந்த இவர் தனது மகள் சித்ரா மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகனுடன் வசித்து வருகிறார். சாவித்திரிக்கு அப்பகுதியில் வழங்கப்பட்ட மனை பட்டாவில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வந்துள்ளார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், புதுமனை புகுவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

Puducherry

இதனிடையே சாவித்திரி வீட்டின் பின்பகுதியியில் உப்பனாரு கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனால் சாவித்திரி வீட்டருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது.  இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு லேசாக சாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த சாவித்திரி இது தொடர்பாக வாய்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று (ஜன. 22) வீடு மிக மோசமாக சாய்ந்து காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்துள்ளனர். அப்போது வீடு முற்றிலுமாக சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக குடியிருப்பிலும், அதனருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.


தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடியிருப்பு சரிந்த இடத்தில் பார்வையிட்டார். ஆய்விற்கு பிறகே அதிக உயரத்தில் தரமின்றி கட்டப்பட்டதால்  வீடு சரிந்து விழுந்ததா அல்லது வாய்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 மாடி கட்டடம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web