வெளியானது புதிய நாடாளுமன்ற பணியாளர்களுக்கான புதிய சீருடை!

 
Parliament

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பாராளுமன்றம் மாற உள்ள நிலையில், ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. அவைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிரீம் நிற ஜாக்கெட்டுகள், இளஞ்சிவப்பு தாமரை அச்சிடப்பட்ட கிரீம் நிற சட்டைகள் மற்றும் காக்கி கால்சட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சீருடைகள் அறை உதவியாளர்கள் உள்பட அனைத்து 271 ஊழியர்களிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையின் (செயல்பாடுகள்) பாதுகாப்பு அதிகாரிகள் நீல நிற சஃபாரி உடைக்கு பதிலாக ராணுவ உடை போன்று அணிவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Uniform

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மூலம் இந்த புதிய சீருடைக்கான டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண், பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடைகளே இருக்கும் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் போது சீருடையை வெளியிடும் திட்டம் இருந்ததாகவும், ஆனால், அது தாமதப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், கடந்த 6ஆம் தேதியே புதிய சீருடைகளை ஊழியர்கள் பெற்றுக் கொண்டு வைட்டனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Uniform

செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கும் ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.

சிறப்பு அமர்வின் முதல் நாளில், இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த தகவல்கள் கூறுகின்றன.

From around the web