மலை உச்சியில் செல்ஃபி எடுத்த புது மணப்பெண் பலி.. தேனிலவில் நடந்த விபரீதம்!

 
Pune

மகாராஷ்டிராவில் தேனிலவு சென்ற மணப்பெண் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே தத்தாவாடி பகுதியைச் சேர்ந்த சுபாங்கி (24). இவருக்கு கடந்த 8-ம் தேதி சாஃப்ட்வேர் இன்ஜினீயரான விநாயக் என்பவருடன் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதி புனே அருகில் உள்ள மலை நகரமான லோனவாலாவிற்கு தேனிலவுக்குச் சென்றனர். அவர்கள் மலை உச்சியில் இருந்த பிரபல்காட் கோட்டைக்கு நடந்து சென்றனர்.

dead-body

மலை உச்சியில் நின்ற படி சுபாங்கி தனது மொபைல் போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி, அருகில் இருந்த 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்துவிட்டார். உடனே விநாயக் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசாரும் மலையேற்றத்தில் ஈடுபடக்கூடிய சிலரும் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர். அவர்கள் சுபாங்கியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சுபாங்கி கீழே விழுந்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police

இது குறித்து பன்வெல் சீனியர் இன்ஸ்பெக்டர் அனில் பாட்டீல் கூறுகையில், “இரண்டு பேரும் காலையில் நடந்து மலையில் இருக்கும் கோட்டைக்கு சென்றுள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு மலை உச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு சுபாங்கி செல்ஃபி எடுக்கும்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். சுபாங்கியின் பெற்றோர் இதில் எந்தவிதச் சந்தேகமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்து இருப்பதால், இதனை விபத்து மரணமாக பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

From around the web