‘நீட்’ பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. ஒடிசாவில் சோகம்
ஒடிசாவில் நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் சாலிபூர் பகுதியை சேர்ந்தவர் கல்யாணி சாகு (18). 12-ம் வகுப்பு மாணவியான இவர் பாட்டியா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) தயாராகிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி 18 மாதங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வருவதும், பயிற்சி மையத்தில் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே விடுதியில் உள்ள மற்ற மாணவர்களால் அவர் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர், மேலும் விடுதி மற்றும் பயிற்சி மைய அதிகாரிகள் அவரது பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒவ்வொரு கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.