நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதா? தேசிய தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாள் கசியவிடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படமும் உண்மையான நீட் வினாத்தாளுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்து பாடப்பிரிவுகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுதும் 557 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 4, 750 தேர்வு மையங்களில், 24 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்த என்டிஏ அதிகாரிகள், “ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் இந்தி மொழித் தோ்வா்களுக்கு தோ்வு மைய அதிகாரி தவறுதலாக ஆங்கில மொழி கேள்வித் தாளை விநியோகம் செய்துள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சில மாணவா்கள், தோ்வு மையத்திலிருந்து விதிகளை மீறி அந்த வினாத்தாளுடன் வெளியேறி வினாத்தாளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனா். ஆனால், அதற்குள்ளாக மற்ற மையங்களில் நீட் தோ்வு தொடங்கிவிட்டது” என்றனா்.
நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘கல்லூரிகளில் சோ்க்கைபெற கனவுகளுடன் காத்திருக்கும் மாணவா்கள், வேலைவாய்ப்பைப் பெற போராடி வரும் இளைஞா்கள் என அனைத்து தரப்பினருக்கும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஓா் சாபமாக மாறிவிட்டது’ என்று விமா்சித்தாா்.
On social media posts claiming that the question paper of NEET (UG)-2024 was leaked, the National Testing Agency (NTA) says, "It has been ascertained from NTA's security protocols and Standard Operating Procedures that the Social Media Posts pointing towards any paper leak are… pic.twitter.com/k0wTS2CZ2K
— ANI (@ANI) May 6, 2024
என்டிஏ முதுநிலை இயக்குநா் சாதனா பராஷா் டெல்லியில் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘நீட் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. சமூக ஊடகத்தில் வெளியான வினாத்தாள் புகைப்படத்துக்கும், உண்மையான நீட் வினாத்தாளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு வினாத்தாளுக்கும் கணக்கு வைக்கப்படுகிறது. தோ்வு தொடங்கியவுடன் தோ்வு மைய கதவுகள் அடைக்கப்பட்டுவிடும். யாரும் உள்ளே நுழைய முடியாது. தோ்வு மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. நீட் தோ்வு நோ்மையாக நடத்தப்படுவது ஒருபோதும் சமரசம் செய்யப்படாது. குறிப்பிட்ட மையத்தில் வினாத் தாள் மாறுதலால் பாதிக்கப்பட்ட 120 மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தப்பட்டது’ என்றாா்.