காவு வாங்கும் நீட் தேர்வு.. கோட்டாவில் 16 வயது மாணவி தற்கொலை.. ராஜஸ்தானில் பயங்கரம்!
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை முன்வைக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நிலைமையை ஒழித்து கட்டி அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கும். நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்கள் எடுத்தாலும் பல லட்சம் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுக்கின்றனர். இதனாலேயே மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது.
இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்காக மட்டுமே ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. கோட்டா பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்ந்துவிட்டால் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கனவில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர். 2023 தொடங்கியதிலிருந்து இது 25வது தற்கொலை சம்பவமாகும். கடந்த 2022-ல் கோட்டாவில் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் 2023-ல் தான் இதுவரை இல்லாத அளவு 25 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இதனிடையே, தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.