பீச்சில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய கைப்பந்து வீரர்.. கதறும் மனைவி!

 
Karaikal

காரைக்காலில் தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிளோமின் ராஜ் (33). இவர் புதுச்சேரி நேஷனல் அளவிலான கைப்பந்து விளையாட்டு வீரராக உள்ளார். மேலும் ஃபைபர் கேபிள் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பிளோமின் ராஜ் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஃபைபர் கேபிள் இணைக்கும் பணிக்கு சென்றுள்ளார். இரவு 9 மணி அளவில் மனைவி கனிமொழி அவரை தொடர்பு கொண்டபோது, அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். 

இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் மீண்டும் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது பிளோமின் ராஜ் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் லேட்டாக வீட்டுக்கு வருவார் என நினைத்து மனைவி காத்திருந்தார் வெகு நேரம் ஆகியும் வராததால் உறவினர்கள் இரவு முழுவதும் பிளோமின் ராஜை தேடி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை காளிக்குப்பம் கடற்கரை பகுதியில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

dead-body

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேரு நகரை சேர்ந்த பிளோமின் ராஜ் என்பது தெரியவந்தது. ரத்த காயங்களுடன் இருந்த சடலத்தின் அருகில் பிளோமின் ராஜ் பயன்படுத்தும் இருசக்கர வாகனமும் ஃபைபர் கேபிள் இணைப்பதற்கான இயந்திரமும் இருந்துள்ளது. இதனை அடுத்து அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்து பிளோமின் ராஜ் என்பதை உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். 

மேலும் விளையாட்டு போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது தொழில் மற்றும் வேறு ஏதும் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பிளோமின் ராஜ் சமீபத்தில் காரைக்காலில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெற்ற கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வாலிபால் போட்டியில் முதல் பரிசு பெற்று முதல்வர் ரங்கசாமி கையில் பரிசு பொருட்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kottucherry PS

மேலும் அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையிடம் முறையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வடக்கு காவல் கண்காணிப்பாளர் நிதின் ஹவுகால் ரமேஷ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web