நாளை மாலை பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி

 
Modi

இந்தியாவின் புதிய பிரதமராக மோடி 3-வது முறையாக நாளை மாலை 7.15 மணிக்கு பதவியேற்கிறார்.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், பாஜக உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது.

மறுநாள் (ஜூன் 5) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமைக்கப்படும்வரை காபந்து பிரதமராக செயல்படும்படி அவரை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையையும் பிரதமர் மோடி அளித்தார். அதை ஏற்று மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்தார்.

Modi

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார்.

அமித்ஷா, நிதின் கட்காரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர். பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட புத்தகம் மீது தலைவைத்து மோடி வணங்கினார். கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும், அடுத்த 5 ஆண்டுகால செயல்பாடு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழு, குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது. நரேந்திர மோடியை நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஒப்படைத்தது.

ஆதரவு கடிதங்களின் அடிப்படையில், 18-வது மக்களவையில் பெரும்பான்மை ஆதரவு மோடிக்கு இருப்பதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு திருப்தி அடைந்தார். அரசியல் சட்டத்தின் 75(1)-வது பிரிவின்கீழ், தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நரேந்திர மோடியை பிரதமராக நியமித்தார்.

PM-modi-innagurates-university-stone-laydown

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு கடிதத்தை பிரதமரிடம் குடியரசு தலைவர் வழங்கினார். இதற்கிடையே, பிரதமர் மோடி பதவியேற்பு விழா, குடியரசு தலைவர் மாளிகையில் நாளை (ஜூன் 9) மாலை 7.15 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை குடியரசு தலைவர் மாளிகை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

எனவே, நாளை மாலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். ஒன்றிய அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

From around the web