வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’.. தத்தளிக்கும் மக்கள்!

 
Mumbai

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பேய் மழை கொட்டி வருகிறது. கடந்த 23-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. 

Mumbai

அதன்படி நேற்று முன்தினம் இரவு மும்பையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலையில் மும்பை உள்பட தானே, பால்கர், நவிமும்பை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மும்பையில் முல்லுண்டு, பாண்டுப், நாகூர், காஞ்சூர்மார்க் ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று மாலையும் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல மழை நீர் தேங்கி கிடந்ததால், வாகன ஓட்டிகள் திண்டாடினர். விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.


இந்த நிலையில், மும்பையில் இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவசியம் இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் மும்பை மநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசமான வானிலை காரணமாக கத்கோபார் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மும்பையில் நேற்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரைக்குள் மட்டும் 100 மிலிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. வீனா நகரில் 104 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது.

From around the web