கள்ளக்காதலனுடன் இருந்த மாமியார்.. உறவை தட்டி கேட்ட மருமகன் கொலை.. புதுச்சேரியில் பயங்கரம்!!
ஆரோவில் அருகே கள்ளக்காதல் உறவை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் குருசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் ஆரோவில் அருகே உள்ள குமரன் நகர் சேரன் வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருவதை தொழிலாக செய்து வந்தார்.
இவரது வீட்டின் எதிரே மாமியார் கோமதி (40) வசித்து வந்த நிலையில், கோமதிக்கும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருக்கும் கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது. மாமியார் கோமதி வீட்டுக்கு தேவா அடிக்கடி வந்து செல்வதை முகுந்தன் தட்டிக் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மனைவி ரம்யா உடன் புதுச்சேரி தியேட்டரில் ஜெய்லர் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவாவுக்கும் முகுந்தனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் முகுந்தன் வீட்டுக்கு வந்த தேவா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முகுந்தனின் வயிறு, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனைவி ரம்யா கண்முன்னே சரிந்து விழுந்த முகுந்தன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். ரம்யா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கடந்த முகுந்தனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரோவில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், முகுந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தேவாவை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.