ஷோரூமில் காத்திருந்த தாய்.. பைக்கில் டெஸ்ட் டிரைவுக்கு சென்ற மகன் விபத்தில் பலி.. கேரளாவில் சோகம்!

 
Kerala

கேரளாவில் புதிய இருசக்கர மோட்டார் வாகனத்தை வாங்கச் சென்று, டெஸ்ட் டிரைவ் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் ஏலம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் துரை. இவரது மனைவி ஷைனி. இந்த தம்பதிக்கு நிதின் நாதன் (23) என்ற மகன் இருந்தான். நிதினின் பிறந்தநாள் மார்ச் 15-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பிறந்தநாள் பரிசாக புதிய பைக் வாங்குவதற்காக வரப்புழாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமுக்கு புதன்கிழமை (06.03.2024) மதியம் நிதினும் அவரின் தாயாரும் சென்றிருக்கின்றனர். பின்னர் தனக்குப் பிடித்த பைக்கை வாங்க ஷோரூமை அடைந்ததும், நிதின் நாதன் தனது புதிய பைக்கை டெஸ்ட்  ரைடுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்தச் சமயம் நிதினின் தாயார் பைக் ஷோரூமிலேயே காத்திருந்திருக்கிறார்.

Accident

டெஸ்ட் ரைடு செய்து கொண்டிருந்தபோது, எளம்குளம் என்ற இடத்தில் உள்ள வளைவில் நிதின் வாகனத்தை திருப்பியபோது, பைக் நிதினின் கட்டுப்பாட்டை இழந்து, மெட்ரோ கட்டுமானத் தூணில் சென்று மோதியது. விபத்து நடைபெற்ற பகுதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால், நிதின் நாதன் விபத்து ஏற்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேலாக சாலையில் கேட்பாரற்றுக் கிடந்துள்ளார். 

பிறகு அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து நிதினை மீட்டு, விட்டிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து நிதினின் தாய் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Police

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதின், தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பிறந்த நாள் பரிசாக பைக் வாங்கச் சென்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web