குளத்தில் தவறி விழுந்த மாணவனை மீட்க முயன்ற தாய்.. 2 நண்பர்கள் உள்பட 4 பேர் பலி!

 
Tumakuru

கர்நாடகாவில் குளத்தில் தவறி விழுந்த மாணவனை காப்பாற்ற முயன்று தாய், அவரது நண்பர்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகலகுண்டே அருகே மல்லசந்திரா பகுதியைச் சேர்நதவர் லட்சுமி (33). இவரது மகன் ரஞ்சித் (11). இந்த சிறுவன் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுடன் சேர்ந்து சங்கர் (11) மற்றும் ஹர்ஷத் (11) ஆகிய 2 மாணவர்களும் படித்து வந்தார்கள். ஒரே வகுப்பில் படித்ததால் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த 3 மாணவர்களும் மடத்திற்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்தார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் லட்சுமி தனது மகனை பார்க்க பெங்களூருவில் இருந்து துமகூருவுக்கு சென்றார். சித்தகங்கா மடத்திற்கு சென்ற அவர் தனது மகன் ரஞ்சித்தை பார்த்து பேசினார். பின்னர் மகனுக்காக கொண்டு வந்த சாப்பாடு, பிற உணவு பொருட்களை கொடுப்பதற்காக மடத்தின் அருகே உள்ள குளத்து பகுதிக்கு லட்சுமியும், ரஞ்சித்தும் சென்றார்கள். அப்போது ரஞ்சித்துடன், அவரது நண்பர்கள் சங்கரும், ஹர்ஷத்தும் சென்றனர்.

குளத்தின் அருகே அமர்ந்து அவர்கள் 4 பேரும் சாப்பிட்டனர். பின்னர் கை கழுவுவதற்காக ரஞ்சித் மட்டும் குளத்திற்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்திற்குள் ரஞ்சித் தவறி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் சங்கர், ஹர்ஷத் குளத்துக்குள் குதித்து ரஞ்சித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

Tumakuru

அவர்களுக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி தனது மகனையும், நண்பர்களையும் மீட்க தண்ணீரில் குதித்துள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

அப்போது குளத்தின் அருகே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மற்றொரு நபர், அவர்கள் 4 பேரையும் மீட்க குளத்திற்குள் குதித்தார். அவர் ரஞ்சித்தை மட்டும் மீட்டு கரை சேர்த்தார். ஆனால் மற்ற 3 பேரையும் அவரால் மீட்க முடியவில்லை. மேலும் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அங்கு வேறு யாரும் இல்லாததால் லட்சுமி, சங்கர், ஹர்ஷத் மற்றும் காப்பாற்ற வந்த நபர் என 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Dead Body

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கியாதசந்திரா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அங்கு விரைந்தார். அதே நேரத்தில் தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அந்த குளம் 35 அடி ஆழம் இருந்ததால், 4 பேரின் உடல்களும் உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், குளத்துக்குள் தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்று உயிரிழந்த நபர், யாதகிரியை சேர்ந்த மகாதேவப்பா என்பது தெரியவந்தது. மேலும் மகாதேவப்பாவின் மகன் பவன், சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். மகனுடன், குளத்தின் அருகே அமர்ந்திருந்த மகாதேவப்பா, சிறுவர்களை காப்பாற்ற முயன்று உயிரை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web