13 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ள முயன்ற தாய் கைது.. மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ள முயன்ற தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஓட்டலில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரித்தனர்.
இதில் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி விபசாரத்தில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள ஓட்டலுக்கு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண் தரகர் ஒருவர் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து பெண் தரகர் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.