மொஹரம் ஊர்வலம்.. மின்சாரம் தாக்கி 4 பேர் துடிதுடித்து பலி.. அதிர்ச்சி வீடியோ!!

 
Jharkhand

ஜார்கண்டில் மொஹரம் ஊர்வலத்தின் போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொஹரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் கெட்கோ கிராமத்தில் இஸ்லாம் மக்கள் பெருமளவில் திரண்டு பேரணிக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். இந்த பேரணியை தலைமையேற்று நடத்தும் குழுவினர் இரும்பினால் ஆன கொடி கம்பத்தை தாங்கி பிடித்து நடந்துக் கொண்டிருந்தனர்.

shock

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கம்பம், மின் கம்பியில் உரசியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே போல 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொகாரோ காவல்துறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷி அலோக் கூறுகையில், “சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பேரணி நடத்த எங்களிடம் அனுமதி கேட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னர்தான் நாங்கள் அனுமதி கொடுத்தோம்.  

திட்டமிட்டபடி 6 மணிக்கு பேரணி தொடங்கியது. இந்நிலையில் கொடி கட்டிய இரும்பு கம்பம் 11 ஆயிரம் வோல்ட் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் இதற்கு கீழே இருந்த மக்கள் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பொகாரோ பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல மாநிலத்தின் மற்ற இடங்களில் இரும்பு கம்பிகளில் கொடியேற்றி ஊர்வலமாக எடுத்துச்செல்ல போலீசார் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மொஹரம் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web