நள்ளிரவு பாரில் தகராறு.. டிஜே சுட்டு கொலை.. ஜார்கண்டில் பயங்கரம்.. பகீர் வீடியோ!

 
Jharkhand Jharkhand

ஜார்க்கண்டில் பாரில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர் டிஜேவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பாரில், மதுபானம் அருந்துபவர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும். இதற்காக டிஜே எனப்படும் டிஸ்க் ஜாக்கி வேலையில் ஒருவர் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பார் மூடப்பட்டது. பணியாளர்கள் கிளம்பி கொண்டிருந்தனர். 

அப்போது, 5 பேர் அந்த பாருக்கு வந்து மதுபானம் தரும்படி கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பாரை மூடிய பின்னர் மதுபானம் தர முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

gun

அப்போது அந்த 5 பேரில் ஒருவர் சென்று விட்டு, திரும்பி வரும்போது கையில் துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். அவர் டிஜேவை நோக்கி துப்பாக்கியை காட்டியபடியே நெருங்கினார். அப்போது, டிஜேவின் நெஞ்சுக்கு நேராக வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ராஞ்சி நகர மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சந்தன் சின்ஹா கூறும்போது, சம்பவம் நடந்த பின் குற்றவாளி அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். காயமடைந்த டிஜேவை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார்.


ராஞ்சி போலீஸ் துணை சூப்பிரெண்டு மற்றும் உள்ளூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோர் இன்று காலை சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து வெளியான வீடியோவில், துப்பாக்கி வைத்திருக்கும் நபர், மேலாடை எதுவும் இன்றி கால் சட்டை அணிந்தும், முகம் தெரியாதபடி, டி-சர்ட் ஒன்றால் மூடியபடியும் காணப்படுகிறார். டிஜேவோ இரு கைகளையும் கட்டியபடி என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்கிறார்.

இந்த சம்பவத்தில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், துப்பாக்கியுடன் காணப்படும் நபர் மற்றும் அவருடைய கூட்டாளிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பாரில் பணியாற்றிய ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

From around the web