பால் வாகனத்தை திருடிச் சென்ற மருத்துவ மாணவர்கள்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

 
Rajasthan

ராஜஸ்தானில் பால் வாகனத்தை திருடிச் சென்ற 3 மருத்துவ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சாஸ்திரி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால் ஏற்றிச் சென்ற வாகனத்தை சில நபர்கள் தடுத்து நிறுத்தி, ஓட்டுனரை மிரட்டி வாகனத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக அந்த வாகனத்தின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். 

Rajasthan

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பால் வாகனத்தை திருடிச்சென்றது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது. 

அந்த மாணவர்கள் ஓட்டுநரை மிரட்டி வாகனத்தை திருடிச் சென்றது மட்டுமின்றி, அவரிடம் இருந்து 4,600 ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் திருடிச் சென்ற வாகனத்தை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அந்த பால் வாகனத்தில் இருந்து 2 கிரேடு பால் பாக்கெட்டுகள் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து போலீசார் பால் வாகனத்தை திருடிச் சென்ற மருத்துவ மாணவர்கள் விகாஸ் பிஷ்னோய்(22), மகேஷ் பிஷ்னோய்(22) மற்றும் ஓம் பிரகாஷ் ஜட்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சாகசத்திற்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

From around the web