வகுப்பறையில் மாணவன் மீது கொடூரமாக தாக்கும் கணித ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ!

 
Gujarat

குஜராத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சக மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் வத்வாவில் மாதவ் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேல் எனும் ஆசிரியர், வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை இழுத்து, சுவரில் அறையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. அவர் அந்த மாணவரை 10 முறைக்கும் மேலாக அறைந்து தரையில் தள்ளினார்.

Beaten

இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து வத்வா போலீசார், ஆசிரியர் அபிஷேக் படேலை கைது செய்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை சட்டவிரோதமானது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உடல் ரீதியான தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் 2000-ம் ஆண்டு தடை விதித்தது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் சமீபத்தில் நடந்த விசாரணையில், பள்ளியில் குழந்தைகளை நெறிப்படுத்த உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்துவது கொடூரமானது என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு உத்தரவாதம் அளித்துள்ள குழந்தையின் வாழ்வுரிமையை மீறுவதாகவும் கூறியது.


இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் - 2009 பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தாக்குதலை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது. இது சிறார் நீதிச் சட்டம் - 2015ன் படியும் சட்டவிரோதமானது.

From around the web