கேங் வாரில் முடிந்த திருமணம்.. டிஜே நடனத்தால் ஏற்பட்ட மோதல்.. வைரல் வீடியோ!

 
Lucknow

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்தில் டிஜே தொடர்பாக இரு தரப்பினரும் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அமினாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குங்கே நவாப் பூங்காவிற்கு எதிரே உள்ள புத்த லால் பட்லு பிரசாத் தர்மசாலாவில் பிப்ரவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பின் போது இருவீட்டார் உறவினர்கள் அனைவரும் டிஜே பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருந்தனர்.

அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் அடிதடி சண்டையாக மாறியது. அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் நாற்காலிகளை வீசத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

Lucknow

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், வரவேற்பறையில் டிஜே பாடல்களுக்கு நடனமாடும் போது கைகலப்பு ஏற்பட்டது. முதலில் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் இடையே உணவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை காரசாரமாக மாறியது என தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீசார், இது தொடர்பான முறைபாடுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web