ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

 
Jammu

ஜம்மு காஷ்மீரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஒருவர் நீச்சலடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றின் கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று ஆற்றுக்குள் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். இதைப் பார்த்த அங்கிருந்த சிலர், சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலரது கண்களுக்கும் தெரியாத சூப்பர் ஹீரோக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

இதுதொடர்பான முழுமையான விடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. சிறுவன் ஆற்றுக்குள் விழுந்த செய்தி கேட்டதுமே அக்கம் பக்கத்தில் உள்ள அனைவருமே அலறியடித்து ஓடி வந்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் தன் உயிரைப் பற்றிக்கூட யோசிக்காமல் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி நீந்திச் சென்று, அவனை கையோடு அணைத்து ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தார். 

Jammu

அங்கு காத்திருந்த பலரும் சிறுவன் உயிரோடு இருப்பதாகவும், உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்தால் அவன் பிழைத்துக்கொள்வான் என்றும் கூறினர். இவை அனைத்துமே இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனிடன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்றும் அவனது விவரங்களையும் கேட்டறிந்தனர்.

இந்த மாதத்தில் மட்டுமே இதுபோன்ற சம்பவம் மூன்றாவது முறையாக நடக்கிறது. மே மாதம் 16-ம் தேதி வடக்கு காஷ்மீர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் ஜீலம் நதியில் தவறி விழுந்து பலியானார். இவரது பெயர் அப்துல் ரஹீம் லோன் என்றும் தண்ணீர் பிடிப்பதற்காக ஆற்றிற்கு சென்றபோதே தவிறி விழுந்து இவர் இறந்துள்ளார் என்ற செய்தியும் பின்னரே கிடைத்தது.


இன்னொரு சம்பவத்தில் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இருவரை காணவில்லை என்றும் ஏழு பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. காணாமல் போன இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web