மனைவி, மகனை வெட்டிக்கொன்று கணவனும் தற்கொலை.. கேரளாவில் பகீர் சம்பவம்!
கேரளாவில் மனைவி, மகனை படுகொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சதாலயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜூ. இவரது மனைவி பிந்து. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களது மகள் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மகன் பேசில் தனது தாயார் பிந்துவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பிந்துவை கணவர் ஷாஜூ அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து இருப்பதாகவும், ஆனால் தனது கணவன் வீட்டிற்கு வந்த தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும், கணவன் தனது வீட்டிற்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பிந்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிந்து வசிக்கும் வீட்டிற்கு ஷாஜூ செல்ல தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிந்துவின் வீட்டிற்கு சென்ற ஷாஜி, தனது மனைவி பிந்து மற்றும் மகன் பேசில் ஆகியோரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் மகள் தனது தாயின் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். நீண்ட நேரமாக செல்போன் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த மகள், அருகில் வசிக்கும் உறவினரை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார்.
அப்போது தாய், தந்தை, சகோதரர் மூன்று பேரும் சடலமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.