ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு.. டெல்லியில் பரபரப்பு

 
Delhi

டெல்லியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபரை 12 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி கேஷேபூர் மண்டி பகுதியில் குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததாக அதிகாரிகளுக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அது குழந்தை அல்ல, பெரியவர் என உறுதி செய்யப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்குள் டார்ச் லைட்டுகள், கேமராக்கள் உதவியுடன் அந்த நபரை அடையாளம் கண்டு மீட்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த ஆழ்துளை கிணற்றில் அருகே பள்ளம் தோண்டி அதன் மூலம் மீட்க முடிவு செய்தனர்.

Delhi

அதேசமயம், ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட உயிர்காக்கும் கருவியில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. எனவே, அந்த நபர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுமார் 12 மணி நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு குழுவினர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து அந்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

dead-body

அந்த நபர், குடிநீர் வாரியத்தில் திருடிவிட்டு வெளியேறியபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றை மூடி வைக்காமல், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை 48 மணி நேரத்துக்குள் மூடி சீல் வைக்கப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

From around the web