கேரளாவில் பட்டாசுகள் வெடித்து வாலிபர் பரிதாப பலி.. கோவில் திருவிழாவுக்கு கொண்டு வந்த போது விபரீதம்!

 
Kerala

கேரளாவில் வேனில் கொண்டு வந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவ்ம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துரா அடுத்து உள்ள புதியகாவு பகவதி அம்மன் கோவிலில் வருடாந்திர விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, வெடிப்பதற்காக பாலக்காட்டில் இருந்து ஒரு டெம்போ வேனில் டன் கணக்கில் பட்டாசுகள் புதியகாவு பகவதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

பட்டாசு வெடிக்க ஏலம் எடுத்த குத்தகைதாரர் மற்றும் ஊழியர்கள், நேற்று டெம்போ வேனில் கொண்டு வந்த பட்டாசுகளை அருகில் இருந்த பட்டாசு குடோனில் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காலை 11 மணியளவில் பட்டாசுகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று பட்டாசுகளில் தீ பிடித்து வெடித்தன.

dead-body

இந்த விபத்தில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (28) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேர் களமசேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 12 பேர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டாசு வெடி விபத்தில், பட்டாசு ஏற்றி வந்த டெம்போ வேன் முற்றிலுமாக தடம் தெரியாத அளவிற்கு எரிந்து நாசமானது. மேலும் குடோன் முற்றிலுமாக வெடித்து சிதறி தரைமட்டமானது. குடோனுக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த 4 சக்கர, 2 சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகின. இந்த விபத்து நடந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஜன்னல் கண்ணாடி மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. வெடி விபத்து ஏற்பட்டபோது அந்த சத்தம் ஒரு கி.மீ தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Police

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பணித்துரா போலீசார் புதியகாவி பகவதி கோவில் திருவிழா கமிட்டியை சேர்ந்த 4 நிர்வாகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு குடோன் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் ஊழியர்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், போலீசார் அவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

From around the web