பட்டபகலில் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து பாய்ந்த நபர்.. ரூ.13 லட்சம் கொள்ளை.. வெளியான CCTV காட்சிகள்!

 
Bengaluru

கர்நாடகாவில் பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் 13 லட்சம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த 20-ம் தேதி அன்று சர்ஜாபூர் பகுதியில் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த பாபு என்பவர் பிஎம்டபிள்யூ காரை நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த காரின் உரிமையாளர் பணத்தை காணாது திடுக்கிட்டார். அவர் உடனடியாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர்.

Bengaluru

பட்டப் பகலில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பாபுவின் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் நின்று கொண்டிருந்தது. அப்போது ஹெல்மெட்டுடன், முகக்கவசம் அணிந்தபடி அருகில் சென்ற கொள்ளையன் காரின் பின்புறம் தயாராக நின்று கொண்டிருந்தார். இன்னொரு கொள்ளையன் எதார்த்தமாக காரின் டிரைவர் சீட் கதவுக்கு அருகில் போய் நிற்பது போல் நின்றார்.

பின்னர் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு கார் அருகில் நின்ற கொள்ளையன், திடீரென கார் கதவு கண்ணாடியை உடைத்து, தலையை காரின் உள்ளே நுழைத்து பணம் வைக்கப்பட்டிருந்த கவரை எடுத்துக்கொண்டு இறங்கினான். பின்னர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு கொள்ளையனின் பின்னால் அமர்ந்து ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.


இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.இருசக்கர வாகனம் எங்கெல்லாம் சென்றது என்பதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் 13 லட்சம் திருடிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் கொள்ளையர்களுக்கு 13 லட்சம் பணம் இந்த காரில் இருப்பது எப்படி தெரிந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

From around the web