தகுதி நீக்கத்தை திரும்ப பெற்ற மக்களவை செயலகம்.. மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி..!
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளதால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆனார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது. இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது காட்டிய வேகத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று விமர்சித்தன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆகியுள்ளார். இதனால்,நாளை தொடங்க உள்ள ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.