லோன் ஆப் மூலம் கடன்.. ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 
Andhra

ஆந்திராவில் லோன் ஆப் மூலம் கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் எர்ரகொண்ட தாண்டாவை சேர்ந்தவர் ராமாவத் ஸ்ரீராமுலு நாயக். இவரது இளைய மகன் பாலசாமி நாயக். இவர் வினுகொண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி படித்து கொண்டே பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், அவரது செல்போனில் சூதாட்ட ஆப்களை டவுன்லோடு செய்து அதில் பணம் கட்டி விளையாட தொடங்கினார்.

Suicide

தொடர்ந்து பணத்தை இழந்து வந்ததால், ஆன்லைனில் லோன் ஆப்கள் மூலம் கடன் பெற்றுள்ளார். இருப்பினும் சூதாட்டம் கைகொடுக்காததால் அதிக பணத்தை கடனாக வாங்கி சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்தார். இந்நிலையில், கடன் அதிகமானதால் பாலசாமி நாயக் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் கடந்த 26-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் வினுகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Police

இதற்கிடையில், எர்ரகொண்ட தாண்டா அருகே உள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் அழுகிய நிலையில் தூக்கில் சடலம் தொங்கியபடி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.ஐ.முகமது பைரோஸ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் காணாமல்போன பாலசாமி நாயக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், பாலசாமி நாயக்கின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

From around the web