சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர் அடித்துக் கொலை... பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

 
Bihar

பீகாரில் சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் ராஜ். இவர், பாட்னாவில் உள்ள பிஎன் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக சுல்தான்கஞ்ச் சட்டக்கல்லூரிக்கு சென்றார். அப்போது அங்கு மூகமூடி அணிந்து வந்த நபர்கள், ஹர்ஸ் ராஜை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஹர்ஷ் ராஜ் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுய நினைவின்றி கிடந்த ஹர்ஷ் ராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Murder

நெஞ்சை உறைய வைக்கும் இந்த  கொடூர தாக்குதல் சம்பவம், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்தன் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பாட்னா கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. கடந்த ஆண்டு தாண்டியா இரவில் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாரத் சோனி கூறியதாவது, சட்டக்கல்லூரி வளாகத்தில் நேற்று கொடூரமான குற்றம் நடந்துள்ளது. சமூக விரோதிகள் சிலர், ஹர்ஷ் ராஜ் என்ற மாணவனை கடுமையாக தாக்கியதில் அவர் இறந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளோம். தாக்குதலுக்கு திட்டமிட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவர் பெயர் சந்தன் யாதவ். அவர் பாட்னா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Police

கடந்த ஆண்டு தசராவின்போது தாண்டியா நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்தே ஹர்ஷ் ராஜ் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே, இது கொலை என்பது தெளிவாக தெரிகிறது. தசரா இரவில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஒருவரையொருவர் கடுமையாக திட்டி உள்ளனர். அப்போது தனது ஈகோ புண்படும் வகையில் எதிர்தரப்பினர் தன்னை திட்டியதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கூறினார்.

 

From around the web