கேரளா இல்லை கேரளம்.. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்!

 
Keralam

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலம் கேரளா. அங்கு தமிழ்நாடு மாதிரி பெரும் தொழில் வளர்ச்சி இல்லை என்றாலும் கூட, தனிமனித வருமானம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அம்மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு ஆட்சி மொழியாக மலையாளம் இருக்கிறது. கடந்த 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு ‘கேரளம்’ என்று பெயர். ஆனால் ஆங்கிலத்தில் கேரளா என்றுதான் அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

Vijayan

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Keralam

ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ், மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

From around the web