ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கேரள தம்பதி, ஆசிரியை.. சூனிய நம்பிக்கையால் நடந்த விபரீதமா?
அருணாசலப் பிரதேசத்தில் கேரள தம்பதி, அவர்களது நண்பரான ஆசிரியை ஆகியோர் மணிக்கட்டு வெட்டப்பட்டு மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில் அறை எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். ஏப்ரல் 1-ம் தேதி இரவு வரை அவர்கள் ஓட்டல் அறையில் இருந்த வெளியே வராததால், ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
ஹோட்டல் அறையில் தம்பதி, குளியலறையில் ஆசிரியை ஆகியோர் மணிக்கட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்கள், கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ தம்பதிகளான நவீன் தாமஸ் (35), தேவி (35) என்று கண்டறியப்பட்டனர். அவர்களுடன் தங்கியிருந்தவர் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஆர்யா (29) என்பது தெரிய வந்தது. ஹோட்டல் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தைக் கைப்பற்றி உள்ளனர். மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அறையில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.
ஆசிரியர் ஆர்யா நாயரைக் காணவில்லை என்று திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவனந்தபுரம் நகர காவல் துணை ஆணையர் நாகராஜு கூறுகையில், உயிரிழந்த மூவரின் நடத்தையில் ஏதோ அசாதாரணமானது இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அவர்களின் செல்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை ஆய்வு செய்யும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது. இவர்களின் மரணம் சூனியத்தால் நிகழ்ந்ததா என்று சொல்ல முடியாது. அவர்கள் மூவரும் எதற்காக அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றார்கள், அவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில், மர்மமாக உயிரிழந்த தம்பதியரின் குடும்ப நண்பரான சூர்யா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தேவியின் தந்தை வனவிலங்கு புகைப்படக் கலைஞர். இவர்களின் மரணத்திற்குப் பின்னால் சூனியம் இருப்பதாகக் கருதுகிறார். அந்தத் தம்பதிகள் சூனிய வலையில் விழுந்ததாக அவர் (தந்தை) என்னிடம் சொன்னார். அத்துடன் ஆன்லைன் வர்த்தகத்திற்காக தம்பதியினர் தங்கள் ஆயுர்வேத தொழிலை கைவிட்டனர். மேலும், நவீன் மற்றும் தேவி ஆகியோர் சூனியம் செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இறந்த மூவரும் நன்றாகப் படித்தவர்கள். எதற்காக இப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இவர்களின் மூவரின் மரணம் குறித்து அருணாச்சல பிரதேச போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.